May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

100 நாள் வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை

1 min read

There are currently no plans to increase the 100-day workday

28.7.2021
100 நாள் வேலை திட்டத்தில் நாட்களை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய மத்திரி கூறினார்.

100 நாள் வேலை திட்டம்

கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டம் உள்ளது. ஏழைகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில்
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக, “மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பணிபுரியும் பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு கூலியைத் தனியாக வழங்குவதற்காக அரசிடம் எந்த திட்டமும் உள்ளதா? அதற்கான கணக்குகளைத் தனியாகப் பராமரிக்குமாறு அமைச்சகம் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பின்புலக் காரணம் என்ன? வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் உள்ளதா? பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு கூடுதல் பயன் தரும் சிறப்பு திட்டங்கள் வகுப்பதற்கான முன்மொழிவு ஏதும் அரசிடம் உள்ளதா?” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு ஒன்றிய இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தனி பட்ஜெட்

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகள் ஆக உள்ள பட்டியல் சாதி பழங்குடியினருக்கு தனி பட்ஜெட் தலைப்புகளின் கீழ் செலவினங்களைத் தொகுப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஆகவே, தேசிய மின்னணு நிதி நிர்வாக முறைமையின் கீழ் பெறப்படும் கூலிச் செலவினங்கள் பட்டியல் சாதி, பழங்குடி, மற்றவர்கள் என தனித்தனியாக 2021 – 22 ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசால் அனுப்பப்படும். இன்னும் மேம்பட்ட கணக்கு முறைமையைக் கொண்டுவரவே இது செய்யப்படுகிறது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின்படி ஒவ்வொரு இல்லத்திலும் வேலை செய்யவும், திறன் அற்ற உடல் உழைப்பு செலுத்தவும் தயாராக உள்ள வயது வந்தவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும். மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியில் இருந்து கூடுதலாக 50 நாள் வேலை தரலாம்.

நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை

மத்திய விவசாய, விவசாயிகள் நல அமைச்சகப் பரிந்துரையின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் 50 நாட்கள் வேலை, அதாவது, 100 நாட்களுக்கு மிகுதியாக வழங்கப்படும். இப்போதைக்கு இத்திட்டத்தின் வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.

இத்திட்டத்தின் முதல் அத்தியாயம் பத்தி 5இல் தனிச் சொத்து உருவாக்க வேலைகள் மேற்கொள்ளப்படும்போது பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் நிலம், வீட்டு மனை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இருக்கிறது.

இவ்வாறு சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் கருத்து

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், “மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் எல்லா கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் பொதுவான திட்டம். இதில், பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் கூலிக் கணக்கை தனி பட்ஜெட் தலைப்பின் கீழ் வகைப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? அவர்களுக்கென்று வேலை நாள் அதிகரிப்பு அல்லது சிறப்பு திட்டங்கள் ஏதும் புதிதாக வகுக்கப்படவில்லை.

வெறும் கணக்குக்காக என்று அமைச்சரின் பதில் தெரிவிக்கிறது. கணக்குக்காகவா கழிப்பதற்காகவா என்ற சந்தேகம் வருகிறது. எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீது கை வைப்பதற்கான உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கெனவே பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களைக் கவனிக்க வேண்டிய அரசாங்கம் இப்படி சாதிய ரீதியான பிரிவினையை கணக்குகளில் எந்த நல்ல நோக்கமும் இல்லாமல் கொண்டு வருவதைக் கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.