May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அமித்ஷாவுடன் அமரிந்தர் சிங் சந்திப்பு

1 min read

Amarinder Singh meets Amit Shah

29.9.2021
சித்துவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகிய அமரிந்தர் சிங், இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறி வந்த அமரிந்தர் சிங், அமித்ஷாவை இன்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகவே அமரிந்தர் சிங் சந்தித்துப்பேசியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. எனினும், அவர் பாஜகவில் இணையக்கூடும் என்று கடந்த சில நாட்களாக வெளி வந்த செய்திகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது. இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

டெல்லியில்…

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று முன்தினம் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

ஆனால் டெல்லியில் பேட்டி அளித்த அமரிந்தர் சிங் வேறு கட்சியில் இணையும் எண்ணம் தனக்கு இல்லை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பஞ்சாப் மாநில முதல்-மந்திரி வீட்டை காலி செய்வதற்காகவே தான் வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில், இன்று அமித்ஷாவை அமரிந்தர் சிங் சந்தித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.