May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தியை விமர்சனம் செய்த கபில் சிபல் வீடு தாக்குதல்

1 min read

Kapil Sibal’s house attack on Rahul Gandhi

30.9.2021
காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்த காரணத்தால் நேற்றிரவு கபில் சிபல் வீடு, கார் அக்கட்சி இளைஞரணியினரால் தாக்கப்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியும், அருவருப்பையும் ஏற்படுத்துவதாக கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கண்டித்துள்ளார்.

கபில்சிபல் வீடு

முழு நேர தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சி கடந்த 2 ஆண்டுகளாக திரிசங்கு நிலையில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்த சொற்ப மாநிலங்களில் சிலவும் ஏற்கனவே கை நழுவிப் போய்விட்ட நிலையில், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் கடும் குழப்பம் நிலவுகிறது. கோவாவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க கட்சி இப்படி கரைவதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்தத் தலைவர்கள் அவ்வப்போது தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்கின்றனர். அதைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே காங்கிரஸின் 23 தலைவர்கள் கட்சிக்கு முழு நேர பொறுப்புகளை ஏற்கக் கூடிய தலைவர் தேவை என சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இவர்களை ஜி-23 (குரூப் 23) என்று அழைக்கின்றனர். ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து காங்கிரஸ் தலைமையை கபில் சிபல் வெளிப்படையாக விமர்சித்தார்.

“கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள். முரண் என்னவென்றால் யாருடன் அவர்கள் நெருக்கம் காட்ட விரும்பவில்லையோ அவர்கள் தான் இன்னனும் உடன் நிற்கிறார்கள். காங்கிரஸில் சீர்திருத்தங்களுக்காக ஜி-23 போராடும். பின் வாங்காது.” என்றார். இதற்காக அவர் வீடு மீது சொந்தக் கட்சியினரே தாக்குதல் நடத்தினர். அவரது காரை சேதப்படுத்தினர்.

ஆனந்தசர்மா கண்டனம்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி.யான ஆனந்த் சர்மா.இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், “கபில் சிபலின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அதிர்ச்சியும், அருவருப்பும் ஏற்பட்டது. இந்த மோசமான செயல் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இதனை கடுமையாக கண்டிக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. கருத்து வேறுபாடுகள் ஒரு ஜனநாயகத்தின் ஒரு பகுதி. தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் சோனியாவை வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.