காங்கிரசில் இருந்து விரைவில் விலகுவேன்; அமரீந்தர் சிங் பேட்டி
1 min readwill soon leave Congress; Interview with Amarinder Singh
30.9.2021
இதுவரை தான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், விரைவில் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தான் பாரதீய ஜனதாவில் சேரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அமரிந்தர் சிங்
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சித்து உடன் ஏற்பட்ட மோதலால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 2 நாட்களுக்கு முன்னதாக டெல்லி சென்ற அவர் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். பஞ்சாப் எல்லை பாதுகாப்பு குறித்து அவர் விவாதித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமரீந்தர் சிங் கூறியதாவது:
விலகுவேன்
நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு சொந்த நம்பிக்கைகள், சொந்த கொள்கைகள் உள்ளன. என்னை கட்சியில் நடத்திய விதம் வருத்தமளிக்கிறது.
காங்கிரசுக்கு எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளேன். இதுவரை நான் காங்கிரசில் இருந்து விலகவில்லை. ஆனால், விரைவில் காங்கிரசில் இருந்து விலகுவேன்.
பாரதீய ஜனதாவில் சேரவில்லை
அமித்ஷாவைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் உட்பட அனைவரும் நான் பாரதீய ஜனதாவில் சேருவேனா என கேள்வி எழுப்பினர். ஆனால், நான் பா.ஜ.க.வில் சேரவில்லை.
சித்து ஒரு முதிர்ச்சியற்ற நபர். அவர் ஒரு நிலையான எண்ணம் கொண்ட மனிதர் அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். அவர் ஒரு அணிக்கு ஏற்ற தலைவர் அல்ல. பஞ்சாப் காங்கிரசை தலைவராக அவர் எப்படி நடத்துவார்?
ராகுல் கட்சிக்கு இளம் ரத்தத்தை கொண்டு வர விரும்புகிறார். அதனால் பழைய தலைவர்களின் ஆலோசனையை கேட்க மறுக்கிறார். கட்சியில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் வரும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அழிவு ஏற்படுத்தும்.
தற்போதைய சூழ்நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் ஆதரவை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. மக்கள் ஆதரவு காங்கிரசுக்கு குறைந்து வருகிறது. அந்த கணிப்பில் காங்கிரஸ் 20 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.