May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டை ரூ.5 ஆயிரத்துக்கு இடைத்தரர்கள் மூலம் விற்பனை

1 min read

Rs 300 darshan ticket for sale in Tirupati for Rs 5,000 through intermediaries

1.10.2021

திருப்பதி தேவஸ்தான தலைவர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களே இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் மாதத்திற்கான ரூ.300க்கான 8000 டிக்கெட்டுகள் மற்றும் 8 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

ஆன்லைனில் வெளியிடப்பட்ட தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் 2 மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் வரும் பக்தர்கள் இடைத்தரகர்களாக செயல்படும் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் அதிக விலை கொடுத்து தரிசன டிக்கெட்டுகளை வாங்கி சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

தேவஸ்தான அதிகாரி

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கர்நாடகாவை சேர்ந்த 3 பக்தர்களும் தெலுங்கானாவை சேர்ந்த 4 பக்தர்களும் திருப்பதியில் தரிசனத்திற்காக வந்தனர்.

ஆனால் அவர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் நிலையம் அருகே இருந்த டாக்ஸி டிரைவர் சுதர்சனம் என்பவரிடம் தரிசன டிக்கெட் கிடைக்குமா என விசாரித்தனர். அவர் ஆட்டோ டிரைவர் சாய்குமார் மற்றொரு சுதர்சனத்திடம் அழைத்துச்சென்று ரூ.300 கட்டணத்தில் 7 தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கொடுத்தார். ஒரு டிக்கெட்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.35 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி டாக்ஸி டிரைவர் சுதர்சனம், ஆட்டோ டிரைவர்கள் சாய்குமார் சுதர்சனம் மற்றும் வங்கி ஊழியர் ஜெயச்சந்திரா திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் வேலை செய்து வந்த பிரசாத் கிரண்குமார் இன்டர்நெட் சென்டர் உரிமையாளர் மோகன் குமார் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.35 ஆயிரத்து பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இதேபோல் எவ்வளவு பேரிடம் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று மோசடி செய்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களே அதிக விலைக்கு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இடைத்தரகர்களிடம் அதிக விலைக்கு தரிசன டிக்கெட்டுகள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.