May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

“கல்விச்சாலை தந்தவன்..ஏழைத்தலைவனை தினமும் எண்ணுவோம்…”

1 min read

We will also think of Kamaraj who gave the school



“கல்விச்சாலை தந்தவன் ஏழைத்தலைவனை தினமும் எண்ணுவோம்…”


பெருந்தலைவர் என்ற பட்டத்துக்கு ஏற்ற ஒரே தலைவர் காமராஜர், தன்னை ஒரு போதும் தலைவனாக காட்டிக் கொண்டதில்லை. ஏழைப்பங்காளனாக, எளிய மனிதனாகவே நடந்து கொண்டார்.


15-07-1903-ல் விருதுநகரில் பிறந்து காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக அரசியலில் பிரவேசித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்ததுடன், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும் 3 முறை பதவி வகித்த அவர், ஆரம்பக்கல்வியில் ஒரு புரட்சியையே செய்தார். வசதி இல்லாதவன் வயிற்றுக்கு சோறு கொடுத்தாலாவது பள்ளிக்கு வந்து படிப்பான் என்று மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மகாத்மா காந்தி வழியில் இறுதி வரை எளிமையையே கடைபிடித்தார்.

அதனால் தானோ என்னவோ, “காலா (கருப்பு) காந்தி” என்று அழைக்கப்பட்ட காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி காலமாகி, காந்தி ஜெயந்தியையும், காமராஜர் நினைவு நாளையும் ஐக்கியப்படுத்தி விட்டார்.

2-10-1975…
காமராஜரை காலன் பறித்துச்சென்ற தினம்.
இன்றோடு 46 ஆண்டுகள் ஓடிவிட்டன.

காமராஜரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்று இங்கே பார்ப்போம்.
அப்போது அவர் பழைய காங்கிரஸ் அல்லது ஸ்தாபன காங்கிரசின் தலைவராக இருந்தார். நாட்டின் நிலை அப்போது நன்றாக இல்லை. அவரால் பிரதமர் ஆக்கப்பட்ட இந்திராகாந்தி தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள எதிர்க்கட்சிகளை நசுக்கிக் கொண்டு இருந்தார். எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்திற்கு வேட்டு வைத்திருந்தார்.

காமராஜர், “தேசம் போச்சே தேசம் போச்சே” என்று கவலையுடன் நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தார்.

1975-ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள். அவருடைய அன்புத்தொண்டன் நடிகர்திலகம் சிவாஜிகணேசனக்கு 46-வது பிறந்த நாள்.
பெருந்தலைவர் காமராஜர், இரண்டு ஆள் உயரத்திற்கு மாலை வாங்கிக் கொண்டு தி.நகர் போக்ரோட்டில் (இப்போது செவாலியே சிவாஜிகணேசன் சாலை) உள்ள சிவாஜியின் இல்லந்தேடிச் சென்றார்.

தன் இதயத்தில் வைத்துப்போற்றும் உன்னதத் தலைவன் வீடு தேடிவந்த மகிழ்ச்சியில் சிவாஜி திக்குமுக்காடிப்போனார்.
சிவாஜிக்கு மாலை அணிவித்து வாழ்த்திய பெருந்தலைவர், ‘நன்றாக இரு’ என்று ஒருமுறை இருமுறை அல்ல; நான்கு முறை மனதார வாழ்த்திவிட்டுப் போனார். அது தான் அந்த பாசத்தலைவனுக்கும், அன்புத் தொண்டனுக்கும் கடைசி சந்திப்பு என்பது இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் காந்தி பிறந்த நாள். அன்று பகல் 11 மணிக்கு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்த சட்டக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் காமராஜருக்கு மாலை அணிவிக்க, திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.

முன்புற அறையில் படுத்து இருந்த காமராஜர், மாணவர்கள் வருவதை அறிந்ததும், “இந்த சின்ன அறையில் அவ்வளவு பேருக்கும் இடம் இராதே. நானே வெளியே வருகிறேன்” என்று வாசலுக்கு வந்தார்.

மாணவர்கள் மத்தியில் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை.
“காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க” என்று மாணவர்கள் எழுப்பிய கோஷங்கள் அடங்கும் முன்பே அவர்களைப் பார்த்து, “சரி விடைபெற்றுக் கொள்கிறேன்” என்று காமராஜர் கை கூப்பினார்.

மாணவர்கள் சென்ற பின்னர், வழக்கமாய் சாப்பிடும் மோருக்கு பதிலாக 2 தம்ளர் வெந்நீர் வாங்கி குடித்தார். சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.
சாப்பிடும்போது அவருக்கு திடீர் என்று வியர்த்துக் கொட்டியது. “தலை எல்லாம் வியர்க்கிறதே” என்று அவர் கூறினார். சாப்பிட்டு விட்டு வழக்கம் போல தூங்குவதற்காக தனது அறைக்குச் சென்று அவர் படுத்த பின்னரும் வியர்வை ஓயவில்லை.

தனது உடலில் ஏற்பட்ட மாறுதலை உணர்ந்து, கட்டிலுக்கு அருகே இருந்த டெலிபோனில் அவரே டாக்டரை உடனே வரும்படி அழைத்தார்.
டாக்டர் வருவதற்கு முன்னரே, காமராஜரின் உயிர் பிரிந்துவிட்டது.

இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் வியர்வையை துடைத்து விட்ட உதவியாளரிடம் “போகும்போது விளக்கை அணைத்து விட்டுப்போ” என்று காமராஜர் கூறினார். “இதுதான் அவரது கடைசி வார்த்தை” என்று கண்களில் கண்ணீர் வழிந்தோட, அந்த உதவியாளர் தழுதழுத்த குரலில் கூறினார்.

பெருந்தலைவரின் வாக்குப்படியே, ஏழைகளின் ஒளிவிளக்கு அன்று அணைந்து விட்டது.

காமராஜர் மறைந்த
ஓரிரு நாளில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடந்தது. அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி பங்கேற்ற இந்த கூட்டத்தில் சிவாஜி கணேசன் கலந்து கொண்டார். அவர் ஒலிபெருக்கி முன் வந்து நின்றதும், உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீர் வடிய அவர் பேசுகையில், “எனக்கு பிறந்தநாள் ஆசி கூற பெருந்தலைவர் என் வீட்டுக்கு வந்தார். வீட்டை விட்டுப் போகும்போது, “நான் போய்விட்டு வருகிறேன்” என்று நான்கு ஐந்து முறை கூறினார். அவர் ஏன் அப்படி திரும்பத் திரும்பச் சொன்னார் என்பது அக்டோபர் 2-ந் தேதிதான், இந்தப் பாவிக்கு புரிந்தது” என்றார்.

காமராஜரின் நேசமிகு தொண்டர்களில் ஒருவர் கவியரசர் கண்ணதாசன். அவர், என்னைப்போல் ஒருவன் படத்திற்காக எழுதிய ஒரு பாடலில் (தங்கங்களே நாளை தலைவர்களே…) “கல்விச்சாலை தந்தவன் ஏழைத்தலைவனை தினமும் எண்ணுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னது போல், அந்த ஏழைத்தலைவனை ஆண்டுக்கு ஒரு நாளில் மட்டுமல்ல; தினம் தினம் எண்ணி நினைவில் நிலைநிறுத்துவோம்.



–மணிராஜ்,
திருநெல்வேலி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.