May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி; மேலும் 2 தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது

1 min read

Mamata Banerjee wins Bhavanipur by-election; The Trinamool Congress won 2 more seats

3/10/2021

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அமோக வெற்றிபெற்றார். மேலும் 2 தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது

மேற்கு வங்காள தேர்தல்

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மம்தா பானர்ஜி வழக்கமாக தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வந்தார். ஆனால் கடந்த தேர்தலின்போது அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

சவால்

மம்தாவின் அரசியல் உதவியாளராக இருந்து வந்த சுவேந்து அதிகாரி பாரதிய ஜனதா கட்சிக்கு தாவி இருந்தார். அவரை நந்திகிராம் தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா நிறுத்தியது.

அந்த நேரத்தில் சுவேந்து அதிகாரி, என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார்.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதிக்கு பதிலாக நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். கடுமையான போட்டி நடந்த நிலையில் மம்தா பானர்ஜி 1956 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஆனாலும் மேற்கு வங்கள சட்டசபை தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்ததால் எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இடைத்தேர்தலில் போட்டி

தேர்தல் கமி‌ஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதல்-மந்திரியாக அல்லது மந்திரியாக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும்.

அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5-ந்தேதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

அவரது பாரம்பரிய தொகுதியான பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

7 வேட்பாளர்கள்

மம்தா பானர்ஜி அதில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் வக்கீல் பிரியங்கா டிப்ரிவாலை பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
இதில் மம்தா பானர்ஜிக்கும், பிரியங்கா டிப்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த மாதம் 30-ந்தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. 57 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

நேற்று ஓட்டு எண்ணிக்கை கொல்கத்தாவில் உள்ள செகாவத் நினைவு பள்ளியில் நடந்தது. 21 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் முதல் சுற்றிலேயே மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றார்.

மம்தா பானர்ஜி முதல் சுற்றில் 5,333 ஓட்டுகளும், பிரியங்கா டிப்ரிவால் 2,956 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். மம்தா பானர்ஜி 2,377 ஓட்டுகள் முன்னிலை பெற்றிருந்தார். அதற்கு அடுத்த சுற்றுகளிலும் மம்தா பானர்ஜிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன.

2-வது சுற்றில் 14,284 ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜிக்கு 9,974 ஓட்டுகளும், பிரியாவுக்கு 3,828 ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. 2-வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 6,146 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். 3-வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 9,974 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் பெற்றிருந்தார்.

11 சுற்றுகள் நிலவரப்படி மம்தா பானர்ஜி, சுமார் 34 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் பிரியங்கா டிப்ரோவால் 8,679 வாக்குகள் பெற்று இருந்தார்.

அமோக வெற்றி

வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்த நிலையில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

மேலும் 2 தொகுதிகளில் வெற்றி

அதேபோல், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.