தென்காசியில் தந்தைக்கு காரியம் செய்ய வந்தவரை வெள்ளம் இழுத்துச் சென்றது
1 min read
In Tenkasi the flood dragged on until the father came to do the thing
17.10.2021
தென்காசியில் இறந்த தந்தைக்கு காரியம் செய்ய வந்தவரை வெள்ளம் இழுத்துச் சென்றது தகவலறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் வெள்ளம்
தென்காசி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் வெங்கட சுப்பிரமணியன் (வயது 43). இவருடைய தந்தை முத்தையா கடந்த விமாழக்கிழமை உடல்நலக் குறைவினால் இறந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது தந்தைக்கு காரியம் கொடுப்பதற்காக இன்று காலை சுப்பிரமணியன் அவரது தம்பி சீனிவாசன் ஆகிய இருவரும் தென்காசி சிற்றாறு யானை பாலம் பகுதிக்கு சென்று உள்ளனர்.
வெள்ளம்இழுத்துச் சென்றது
அங்கு காரியம் செய்வதற்காக படிக்கட்டில் இறங்கி குளித்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக தென்காசி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் குளிப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கிய வெங்கட சுப்பிரமணியனை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தம்பி சீனிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையம் மற்றும் தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்டனர்
தகவலறிந்த தென்காசி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும், தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் தலைமையில் போலீசாரும் சிற்றாறு யானை பாலம் பகுதிக்கு விரைந்து வந்தனர்.
அப்போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட வெங்கட சுப்பிரமணியன் சற்று தொலைவில் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த தீயணைப்புத் தறையினர் உடனடியாக தங்களது பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் கயிறு கட்டி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த வெங்கடேசை மீட்க போராடினார்கள்.
இந்நிலையில் தண்ணீரில் தத்தளித்த வெங்கடேஷ் வெள்ள நீருக்கு சற்று மேல் பரவிக் கிடந்த ஒரு மரத்தின் கிளையை பிடித்து கொண்டார்.அப்போது தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் வெங்கடசுப்ரமனியனிடம் அச்சம் அடைய வேண்டாம் உங்களை மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். நீங்கள் அந்த மரக்கிளையை வலுவாகப் பிடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி அதன் மூலமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த வெங்கட சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டனர்.
இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட தென்காசி தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் ரமேஷ், தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் ஆ.ராஜ்குமார், அ.ராமசாமி, கி.ஜெகதீஸ் குமார், மற்றும் தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கற்பகராஜ், தனிபிரிவு தலைமை காவலர் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, காவலர் பாலமுருகன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.
தடுப்பு
சிற்றாற்றில் வெள்ளம் அதிகமாக இருப்பதால் குளிப்பதற்கோ, தர்ப்பணம் கொடுப்பதற்கோ யாரும் வரக்கூடாது என காவல் துறையினர் அறிவித்து யானைப்பாலம் பகுதியில் தடுப்புகள் அமைத்தனர்.