தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in 9 districts of Tamil Nadu today
26.10.2021
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், இதர தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மழை அளவை பொறுத்தவரை கடந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தலா 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.