May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.65.33 லட்சம் கோடி இழப்பு

1 min read

Natural disasters cost India Rs 65.33 lakh crore last year

26.10.2021
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் ரூ.65.33 லட்சம் கோடி (8,700 கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உலக வானிலை மையம் (டபிள்யு எம்ஓ) கணித்து அறிவித்துள்ளது.

ஆசியாவில் உள்ள காலநிலையின் சூழல் என்ற தலைப்பில் உலக வானிலை அமைப்பு நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. ஐ.நா. சார்பில் காலநிலை தொடர்பான மாற்றம் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் 31-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.65.33 லட்சம் கோடி

‘ஆசியாவில் கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம், கடும் மழை, வறட்சி ஆகியவற்றால் சீனா, இந்தியா, ஜப்பான் நாடுகள் அதிகமான சேதத்தைச் சந்தித்துள்ளன. இதில் சீனா அதிகபட்சமாக இயற்கைப் பேரழிவுகள் மூலம் 23,800 கோடி டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது.
அடுத்ததாக இந்தியா கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகள் மூலம் 8,700 கோடி (ரூ.65.33 லட்சம் கோடி) டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் 8,300 கோடி டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தப் பொருளாதார ரீதியான சேத விவரங்களை ஆசியாவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ஈஎஸ்சிஏபி) தயாரித்து வழங்கியுள்ளது.

வெப்பம்

இந்த அறிக்கையின்படி, கடந்த 2020-ம் ஆண்டுதான் ஆசியாவிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 1981 முதல் 2010-ம் ஆண்டுவரை இருந்த வெப்பநிலையை விட 1.39 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில், மாநிலங்களில் வெயிலின் கொடுமை மோசமாக இருந்தது. அதில் ரஷ்யாவின் வெர்கோயான்சக் நகரில் எப்போதும் இல்லாத வகையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது ஆர்டிக் பகுதியில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாகும்.

நிலச்சரிவுகள்

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய கோடைகாலப் பருவமழை கடந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. அடிக்கடி வரும் புயல்கள், அதனால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவுகள், மனித உயிரிழப்புகள், இடப்பெயர்வு போன்றவை நிகழ்ந்தன.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆசியாவில் இந்தியா, வங்கதேசத்தைத் தாக்கிய அம்பன் புயல் வலிமையான புயலாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 24 லட்சம் மக்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்தனர். 25 லட்சம் மக்கள் வங்கதேசத்தில் இடம் பெயர்ந்தனர். தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அதிகமான மக்கள் வாழும் பகுதியில் புயல், மழை, வெள்ளம் ஆகியவை ஏற்படும்போது, லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்கின்றனர். இது கடந்த ஆண்டு இந்தியா, சீனா, வங்கதேசம், ஜப்பான், நேபாளம், வியட்நாம் நாடுகளில் பரவலாக நடந்தன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.