பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடினால் ஏன் கோபம்?-மெகபூபா முப்தி கேள்வி
1 min read
Why angry when Pakistan celebrates victory? -Question by Mehbooba Mufti
26/10/2021
பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம் என கேள்வி எழுப்பியுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, காஷ்மீர் துண்டாக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது எத்தனை பேர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பதை யாரும் மறந்துவிடவில்லை எனக் கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டி
துபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.
பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அதை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மெகபூபா முப்தி
இந்தநிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம்? சிலர் கொலைவெறிக் கோஷங்களையும் எழுப்புகிறார்கள். துரோகிகளைச் சுட வேண்டும் என கூறுகிறார்கள். காஷ்மீர் துண்டாக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது எத்தனை பேர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முதலில் வாழ்த்து தெரிவித்து சரியான எண்ணத்தை வெளிப்படுத்திய விராட் கோலியைப் போல, எதிர்ப்பு என்ற எண்ணத்தில் இருந்து ஏற்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.