குறைவான தடுப்பூசி பதிவாகியுள்ள 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
1 min readPrime Minister Modi consults with 40 district collectors who have reported low vaccination
31.10.2021
குறைவான தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ள 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
தடுப்பூசி
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, பொருளாதாரத்தை நிலைநாட்ட, இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் 40 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது.
மோடி ஆலோசனை
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் குறைந்த சதவீதம் பதிவாகியுள்ள 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
50 சதவீத்திற்கும் குறைவாக முதல் டோஸ் பதிவாகியுள்ள மாவட்டங்கள் மற்றும் 2-வது டோஸ் மிகவும் குறைவாக பதிவாகியுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார். ஜி-20 மாநாடு மற்றும் சி.ஓ.பி.26 ஆலோசனை கூட்டம் முடிந்து இந்திய திரும்பிய உடன் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.
இந்தியாவில் 10.34 கோடி மக்கள் காலஅவகாசம் முடிந்த நிலையில் 2-வது டோஸ் எடுத்துக் கொள்ளவில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.