November 9, 2024

Seithi Saral

Tamil News Channel

பருவமழை பாதிப்பை சீரமைக்க ரூ.6,230 கோடி தேவை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

Rs 6,230 crore needed to repair monsoon damage: MK Stalin’s letter to PM

29.12.2021
பருவமழை பாதிப்பை சீரமைக்க ரூ.6,230 கோடி தேவை என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
29.12.2021

வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக்கோரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீளவும் சேதமடைந்த கட்டமைப்புகளை சரிசெய்திடவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைமைக்குக் கொண்டு வரவும் ஏதுவாக, ஒன்றிய அரசின் நிதியினை விரைவில் விடுவித்திட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (29-12-2021) கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளதாக தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழுவினர் 21-11-2021 அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதைக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும் சாலைகள் பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4.719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 16-11-2021, 25-11-2021 மற்றும் 15-12-2021 ஆகிய நாட்களில் சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் அவர்கள் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்/
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.