ஈவ்-டீசிங்கால் மன உளைச்சல்; கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
1 min readDepression by Eve-Teasing; College student commits suicide by jumping in front of train
29.12.2021
ஆவடியில் கல்லூரி மாணவரை ஈவ்-டீசிங் செய்ததால் மனமுடைந்த மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜப்பேட்டையை சேர்ந்த குமார்(வயது 20) என்பவர் பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ.வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை இந்துக்கல்லூரி ரெயில் நிலையத்தில் மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒருசிலர் ரெயில் இருக்கையில் அமர்ந்திருந்த குமாரை கேலியும் கிண்டலும் செய்து உள்ளனர்.
சிறிது நேரத்தில் போராட்டம் முடிந்த நிலையில், ரெயில் புறப்பட்டு திருநின்றவூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.
மன உளைச்சலுக்கு ஆளான குமார், திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இறங்கி இரவு வரை ரெயில் நிலையத்தில் காத்திருந்து பிரசிடென்சி வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்ததால், நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகையால் நான் தற்கொலை செய்து கொல்லப் போகிறேன். நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை மன்னித்து விடவும்” என்று கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து, ரெயில் நிலையத்தில் காத்திருந்த குமார், நேற்று இரவு சுமார் 8:40 மணி அளவில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில், போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரெயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.