June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அம்மா உணவகம் மூடப்படாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min read

Mother restaurant will not be closed: First-Minister MK Stalin’s commitment

7.1.2022
“எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபை

தமிழக சட்டசபையில் இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தைக் கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பட்டியல் படித்தார். இதுபோன்ற பட்டியலைப் படிக்க வேண்டுமானால் என்னிடம் நிறையவே இருக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சட்டமன்றமும் நடந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சட்டமன்றம் நடந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு மாடி அளவில் கட்டப்பட்ட மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முனைந்ததும், பராமரிக்காமல் பாழடைய வைத்ததும் யார்? அங்கிருந்த பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கீழ் இருந்த கருணாநிதியின் பெயரை மறைத்தது யார்?

பெயர் நீக்கம்

காப்பீட்டுத் திட்டத்தில், வீடு வழங்கும் திட்டத்தில் கருணாநிதியின் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவில் கருணாநிதியின் பெயரை செடி, கொடிகளை வைத்து மறைத்துப் பராமரிக்காமல் விட்டது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கருணாநிதியின் பெயரை எடுத்தது யார்? ராணி மேரி கல்லூரியில் கருணாநிதி அரங்கத்தின் பெயரை நீக்கியது யார்? கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகப் பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரங்களை பாழ்படுத்தியது யார்? உழவர் சந்தைகளை இழுத்து மூடியது யார்?

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிமிடெட்டை முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம் ஆகியவற்றைக் கிடப்பில் போட்டது யார்? மதுரவாயல்-சென்னை துறைமுக உயர்மட்டச் சாலைத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர்க் கல்விப் பாடப்புத்தகத்தில் கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடகக் கலை குறித்த பாடத்தில் இருந்த கருணாநிதியின் பெயரையும் ஸ்டிக்கர் வைத்து மூடி மறைத்தது யார்?

இப்படி வரிசையாக நீண்டநேரம் என்னால் சொல்ல முடியும். பல கேள்விகளைக் கேள்வி கேட்க முடியும். இதை எல்லாம் நீங்கள் செய்தீர்கள், அதனால் நாங்கள் செய்தோம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நடந்துகொள்ளக்கூடிய எண்ணம் எனக்கு ஒருக்காலும் ஏற்பட்டதில்லை, வரவும் வராது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்றுதான் இன்றைக்கும் இருக்கிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் என்றுதான் இன்னமும் இருக்கிறது. சென்னை உயர்கல்வி மன்றத்துக்குள் அவருக்குச் சிலை இருக்கிறது. அவரது நினைவகம், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதை இந்த அரசே பராமரித்துக் கொண்டும் இருக்கிறது.

அம்மா கிளினிக்

அம்மா கிளினிக் என்று பெயர் வைத்தீர்களே தவிர, கிளினிக் இல்லை. இல்லாத ஒன்றை எப்படி இந்த அரசு மூட முடியும்? அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அவை முன்னவர் கூட, கருணாநிதி பெயரில் இருந்த திட்டங்களை மாற்றப்பட்ட ஆதங்கத்தில் “ஒரு உணவகத்தை மூடினால் அதில் என்ன தவறு?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார். என்னைப் பொறுத்தமட்டில், நான் அப்படி நினைக்கவில்லை. எந்த அம்மா உணவகமும் மூடப்படக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். அதனால்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என்று நான் அறிவித்தேன். இன்றுவரை அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். நிச்சயமாக இருப்பேன், அதில் எந்தவிதத்திலும் மாற்றம் ஏற்படாது என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு நான் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.