May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

முழு ஊரடங்கால் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திருமணம் செய்த ஜோடிகள்

1 min read

Full Uratangal Thiruparankundram Temple Formerly married couples

23.1.2022-

திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்ட ஏராளமானோர் இன்று அதிகாலையிலேயே அங்கு திரண்டனர். கோவிலுக்குள் செல்ல தடை என்பதால் பலர் கோவிலின் முன்பு நின்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு எனும் பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். சூரனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொடுத்தார்.

இங்கு முருகப்பெருமான் தெய்வானையோடு திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தடை

இதற்காகவே திருப்பரங்குன்றம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. தற்போது கொரோனா மூன்றாம் அலை பரவலால் தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தற்போது மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவிலுக்கு வெளியே…

இந்நிலையில் இன்று முகூர்த்த நாள் ஆகும். ஏற்கனவே திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்ட ஏராளமானோர் இன்று அதிகாலையிலேயே அங்கு திரண்டனர். கோவிலுக்குள் செல்ல தடை என்பதால் பலர் கோவிலின் முன்பு நின்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

காலையில் இருந்தே தொடர்ச்சியாக பல ஜோடிகள் திருமணம் செய்து வருகின்றனர். திருமணத்தின்போது மணமக்களின் உறவினர்கள் 20-க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். காலை முதலே அடுத்தடுத்து ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதால் திருப்பரங்குன்றம் கோவிலின் முன்பு பரபரப்பாக இருந்தது.

போலீசார் கூட்டம் சேரவிடாமல் ஒவ்வொரு குழுவினராக கோவில் வாசலில் திருமணம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தனர். இன்று காலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் மிக எளிய முறையில் நடைபெற்றது.

முழு ஊரடங்கின் போதும் கோவில்கள் அடைக்கப்பட்ட நிலையிலும் பக்தர்கள் தங்களது இறை பக்தியை கைவிடாமல் பூட்டிய வாசலில் முன்பு திருமணம் செய்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.