May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தேசிய கொடியை இறக்க முயற்சித்தபோது கொடிகம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளிமாணவி பலி

1 min read

A schoolgirl was killed when she was electrocuted while trying to lower the national flag

29.1.2022
தேசிய கொடியை கம்பத்தில் இருந்து இறக்க முயற்சித்த போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கொடி

சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின பள்ளி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் நேற்று குடியரசு தினம் விழா கொண்டாடப்பட்டது. விடுதி வளாகத்தில் மிகப்பெரிய உயரத்தில் இரும்பாலான கொடிகம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதன் பின்னர் மாலை தேசியக்கொடியை கொடிகம்பத்தில் இருந்து கழற்றி கொண்டுவரும் படி விடுதி காப்பாளர் மாணவிகளான கிரன் திவா மற்றும் காஜல் ஆகியோரிடம் கூறியுள்ளார்.

மின்சாரம் பாய்ந்து சாவு

இதையடுத்து, இரு மாணவிகளும் கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியை இறக்க முயற்சித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது சாய்ந்தது. இதனால், இரும்பாலான கொடிக்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால், கொடிக்கம்பத்தை பிடித்துக்கொண்டிருந்த இரு மாணவிகள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் மாணவி கிரன் திவா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்ததில் மற்றொரு மாணவியான காஜலுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவி காஜலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவி கிரன் திவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதி காப்பாளர் ஐஸ்வர்யா சாஹுவை பணி இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.