July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

திமுக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு

1 min read

Demolition of buildings occupied by DMK dignitaries

14.2.2022
தஞ்சாவூரில் திமுக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

மாநகராட்சி கட்டிடம்

தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுரடி இடத்தில், சுதர்சன சபா அமைந்துள்ளது. 1927ம் ஆண்டு திறக்கப்பட்ட சபாவில், ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு போன்றவை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சபாவை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ராமநாதன், 1991 ஜூலை 7ம் தேதி சபா தலைவரானார். அவரது சகோதரர்களான நாகராஜன் செயலராகவும், குமரவேல் பொருளாளராகவும், மணி பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தனர்.

சபாவில் நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்தி, அந்த வளாகத்தை மதுபான பார், ஹோட்டல், பேக்கரி, மொபைல் போன் கடைகள் நடத்த உள் வாடகைக்கு விட்டதோடு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் செலுத்தாமல், வருவாய் இழப்பு ஏற்படுத்தினர்.

சீல் வைப்பு

இதையடுத்து நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் குத்தகை விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுக பிரமுகர் வசம் இருந்த சுதர்சன சபாவை தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975-ன் படி மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தினர். மாநகராட்சி அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்ட சுதர்சன சபாவின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் மாநகராட்சிக்கு குத்தகை நிலுவை தொகை 20 கோடி ரூபாய் வரை பாக்கி செலுத்த வேண்டியிருந்ததும் தெரிய வந்தது.

இடிப்பு

இந்த நிலையில் மொத்த சுதர்சன சபா வளாகத்தில் இருந்த கடைகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை (14ம் தேதி) கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார், போலீஸ் எஸ்பி ரவளிபிரியா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சுதர்சன சபா பகுதிக்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து சுதர்சன சபாவில் இருந்த ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை பொக்லைன் இந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டதுடன் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.