May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பாடிய பாடல்களால் இன்னும் நினைவில் வாழும் சந்திரபாபு(இன்று மார்ச் 8 நினைவுநாள்)

1 min read

Chandrababu who is still remembered for the songs he sang

8.3.2022

பாடிய பாடல்களால் இன்னும் நினைவில் வாழும் சந்திரபாபு

பிறக்கும்போதும் அழுகின்றான்… இறக்கும்போதும் அழுகின்றான்.. (குமாரராஜா)
ஒண்ணுமே புரியலே உலகத்திலே (கவலை இல்லாத மனிதன்)
நான் ஒரு முட்டாளுங்க (சகோதரி)
புத்தியுள்ள மனிதரெல்லாம் (அன்னை)
பொறந்தாலும் ஆம்பிளயா பொறக்கக்கூடாது (போலீஸ்காரன் மகள்)
சிரிப்பு வருது சிரிப்பு வருது (ஆண்டவன் கட்டளை)
குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே (மரகதம்)
மேற்சொன்ன பாடல்களைப்பாடி ஆடி நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர், சந்திரபாபு. ஜேபி சந்திரபாபு எனப்படும் அவர், தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் 1927 ஆகஸ்டு 5&ந் தேதி பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரைப் பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குடும்பம்
சந்திரபாபுவின் தந்தை ஜெ.பி.ரோட்ரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரிட்டீஷ் அரசு இவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார்.
சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார்.
சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது 16-ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
நீதிபதி முன் கையை சுட்டுக் கொண்டார்
ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சியை கொளுத்தி தனது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார், “உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்” என்று.
1947-ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-ஆம் ஆண்டுகளில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்ராஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் சந்திரபாபு பெயர் பெற்றிருந்தார்.
மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை
நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண், தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் சந்தோசமாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.)
எம்ஜிஆரை வைத்த மாடிவீட்டு எழை என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் எம்ஜிஆருடன் ஏற்பட்ட மோதலால் அப்படம் கைவிடப்பட்டது.
அதோடு, அவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960 -ஆம் ஆண்டுகளில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் தொடங்கியதும் சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், ராஜா, அவன்தான் மனிதன் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.
1975-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிள்ளைச் செல்வம்’ என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ஆம் ஆண்டு மார்ச் 8&ந் தேதி அவர் மரணமடைந்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.
சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர். சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் அவருடைய பாடல்கள் ஒலிக்கின்றன.
ஜனாதிபதியின் மடியில் அமர்ந்தவர்
எஸ். ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசுத் தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு “பிறக்கும்போதும் அழுகின்றான்” என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார். அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி “நீ ரசிகன்” என்றார், சந்திரபாபு! சுற்றியிருந்தவர்கள் பதறினாலும் குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.
சந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், பறக்கும் பாவை என்னும் படத்தில் சுகமெதிலே இதயத்திலா என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, சபாஷ் மீனா திரைப்படத்தில் ஆசைக்கிளியே கோபமா என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற படத்தில், ‘ஜாலி லைப்” என்னும் இவரது பின்னணிப் பாடலுக்குக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
புனித பாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார், சந்திரபாபு. அவர் . இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.