May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ரூ. 3,500 கோடி முதலீடு; முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

1 min read

In Tamil Nadu, Lulu Das Rhys Russ. 2,1 Crare Investment; Memorandum OP Understanding in the Presence OP The First-Minister

28.3.2022

தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ரூ. 3,500 கோடி முதலீடு செய்யும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுள்ள மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன நிர்வாக அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

முதல்-அமைச்சரின் துபாய் பயணம் குறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து சந்திப்பு மற்றும் லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் 3500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, துபாய் பயணத்தினை முடித்துக் கொண்டு, அபுதாபிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் (28.03.2022) கலந்து கொண்ட நிகழ்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த அபுதாபியில் உள்ள முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார்.

1) முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குநர் சையத் அரார் உடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டில், மிகப் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்நிறுனத்திற்கு அழைப்பு விடுத்தார். ஏற்கெனவே, முபாதாலா நிறுவனம், பிரின்ஸ்டன் டிஜிட்டல் என்ற நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடுகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் நிறுவனங்களுக்கிடையே ஒரு பணிக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனடியாக துவங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விடுதிகள் மற்றும் தகவல் தரவு மையங்கள் போன்ற மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுத்திடவும் முதலமைச்சர் , முபாதாலா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

2) அபுதாபி வர்த்தக சபை தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தகக் கூட்டமைப்பு தலைவருமான அப்துல்லா முகமது அல் மஸ்ரோயீ உடனான சந்திப்பின்போது, அபுதாபி நிறுவனங்கள் தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிர்பதனக் கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள், வணிகத்தீர்வை திட்டங்கள் போன்றவற்றில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு/வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள், தடையில்லா வர்த்தக மண்டலங்கள், கிடங்குகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களில் முதலீடு செய்திடலாம் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஓசூர் போன்ற நகரங்களில் தொழில், சேவை மற்றும் சில்லரை வணிகங்கள் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகம் உள்ளது என்றும், எனவே, இத்துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறும், அபுதாபி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

3) ஏடிகியூ நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி, முகம்மது அல் சுவைதி உடனான சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில், முதலீடுகள் மேற்கொள்ளுமாறு, இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருடன் சந்திப்பு

மேற்கொண்ட சந்திப்புகளை முடித்துக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலியை இன்று அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதில், 2,500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வுகளின்போது, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர், ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.