May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.20,860 கோடி நிதியை உடனே விடுவிக்க மு.க.ஸ்டாலின் நிதி மந்திரியிடம் மனு

1 min read

Petition to MK Stalin’s Finance Minister for immediate release of Rs 20,860 crore due to Tamil Nadu

1.4.2022

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாயை உடனே விடுவிக்க கோரி நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை டெல்லி சென்றார்.
அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகு மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகம் நலன் சார்ந்த 14 கோரிக்கைகள் அடங்கிய 41 பக்க மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

அமித்ஷா

இதன் பிறகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின்கட்காரி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து விரிவாக விளக்கி கூறினார்.

நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு இல்லத்தில் நேற்று இரவு தங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணி அளவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார்.

தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பஞ்சாயத்து

2015-2020 காலகட்டத்திற்கு, 14-வது நிதிக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை.
இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதைப்போன்று 14-வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது.

மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 201718-ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை.

இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

எனவே, அடிப்படை மானிய நிலுவைத் தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது.

ஒன்றிய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகைகள் பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது.

பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது. பெருந்தொற்றிற்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.

வருவாய் அதிகரிக்கவில்லை

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், 30.06.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022-க்குப் பின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.