அம்பை அருகே பள்ளியில் மோதல் 12ம் வகுப்பு மாணவன் சாவு- 3 மாணவர்கள் கைது
1 min read12th class student killed in school clash near Ambai – 3 students arrested
30.4.2022
அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் 12ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் 11 ம் வகுப்பை சேர்ந்தை 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மோதல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 25ந்தேதி இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெல்டால் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சாவு
தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அந்த 12ம் வகுப்பு மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால் பாப்பாக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய 3 மாணவர்களையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களையும் போலீசார் கைதுசெய்தனர். மாணவர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் காயமடைந்த 12ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.