எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகத்தை தற்போது உள்ளவர்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான்- மு.க.ஸ்டாலின்
1 min readIt would be wrong to expect the political civilization that MGR had with those present – MK Stalin
30.4.2022
“எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகத்தை தற்போது உள்ளவர்களிடம் எதிர்பார்ப்பது என் தவறுதான்” என்று எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தேனியில் மு.க.ஸ்டாலின்
தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை பகுதியில் நடந்தது.
விழாவில் பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
உழைப்பு
நம்முடைய தலைவர் கருணாநிதியிடம் ஒரு பத்திரிகை நிருபர், ‘உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள்’ என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு கருணாநிதி, ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று சொன்னார். அந்த உழைப்பை கற்றுக் கொடுத்தவரே அவர் தான். அப்படி உழைப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தவரே அவர் தான்.
எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் தான் வழிகாட்டியாக விளங்கிக் கொண்டு இருக்கிறார். அவருடைய பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதியை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்து, எல்லா கட்சித் தலைவர்களும் அதை வரவேற்று, அதை நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். ஒரு தந்தையுடைய பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று அறிவிக்கிற வாய்ப்பு அவருக்கு மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எம்.ஜி.ஆர்
பா.ஜ.க. கூட இதை ஆதரித்தது. எல்லா கட்சிகளும் ஆதரித்தார்கள். ஆதரிக்காத கட்சி யார் என்று இந்த மேடையில் நான் சொல்ல விரும்பவில்லை. இந்த மேடையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. கருணாநிதி என்று நம் தலைவர் பெயரை குறிப்பிட்ட காரணத்தால் அவருடன் காரில் வந்த ஒருவரை இறக்கிவிட்டவர் யார் என்றால், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., ‘எனக்கே தலைவர் கலைஞர் தான். அவர் பெயரை நீ செல்லலாமா?’ என்று கேட்டவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடம் எதிர்பார்ப்பது என்னுடைய தவறு தான். ஆனால், இதன் மூலம் மக்களிடம் தாங்கள் யார் என்பதை அவர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.