May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

1 min read

6 candidates elected from Tamil Nadu to state level without contest

3.6.2022
மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகிற 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்த பதவியிடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சையாக பத்மராஜன், அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன் சோழகனார், தேவராஜன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி ஆகிய 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். சட்டமன்ற செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. வேட்புமனுவுடன் ஒவ்வொரு வேட்பாளரும் 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யாதபட்சத்தில் வேட்புமனு பரிசீலனையின் போது முன்மொழிவு கடிதத்தை சமர்ப்பிக்கலாம். இதனையடுத்து வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர்கள் 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் உத்தரவிட்டார். மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

போட்டியின்றி தேர்வு

இந்தநிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான நேரம் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் போட்டியின்றி தேர்வாகினர். திமுக சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர். தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் 7 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வ அறிவித்தார். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும் மாநிலங்களவை எம்.பி.க்களாக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.