கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த பயங்கரவாதி கைது
1 min readTerrorist arrested for driving an auto in Karnataka
7.6.2022
கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஹூசைன் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
பயங்கரவாதி
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் பெங்களூரு சென்று இருந்தனர். அப்போது பல வழக்குகளில் தேடப்படும் பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஹுசைன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து ஹூசைனை பெங்களூரு போலீசார் வலைவீசி தேடத் தொடங்கினர். இந்த ஆப்ரேஷனில் ராஷ்டிரிய ரைஃபில்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கைது
இந்த தேடுதல் நடவடிக்கையில் ஆட்டோ டிரைவராக மாறுவேடத்தில் இருந்த ஹூசைனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பெங்களூரு ஸ்ரீராமபுரா பகுதியில் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஹூசைன் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை பற்றிய தகவலை போலீசார் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாலிப் ஹூசைன். 2016-ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்தவர். அந்த இயக்கத்துக்கு இளைஞர்களை சேர்க்கும் மூளைச் சலவை செய்யும் பணி ஹூசைனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தாலிப் ஹூசைனுக்கு 2 மனைவிகள். இவர்களில் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் இருக்கிறார். மற்றொரு மனைவியுடன் பெங்களூரு ஸ்ரீராமபுரா பகுதியில் குடியிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார் ஹூசன்.
இந்த ஆட்டோவின் உரிமையாளருக்கு கூட ஹூசைனின் பின்புலம் தெரியாது என ஆட்டோவின் உரிமையாளர் கூறியுள்ளார். தற்போது பெங்களூர் போலீசிடம் பிடிபட்ட ஹூசைன் எதற்காக இங்கே பதுங்கி இருந்தார்? பெங்களூரில் நாசவேலைகளுக்கு ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதா? ஹுசைன் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்? என போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், ஜம்மு காஷ்மீர் போலீசார் பெங்களூருவில் பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கர்நாடகா மாநில போலீசார் உதவி செய்துள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டங்களை போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றார்.