மிருகம் என்று நினைத்து வாலிபரை சுட்டுக கொன்ற வேட்டைக்காரர்கள்
1 min read
The hunters shot the boy thinking he was an animal
10.7.2022
மிருகம் என்று நினைத்து வாலிபரை சுட்டுக கொன்ற வேட்டைக்காரர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குண்டு பாய்ந்து சாவு
கேரளமாநிலம் இடுக்கி அருகே மிருக வேட்டையாடச் சென்ற கும்பலை சேர்ந்த இளைஞர் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். கேரளா: இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் மகேந்திரன் (வயது 24). மகேந்திரன் விவசாய தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகேந்திரன் கிடைக்காததால் அவரது தந்தை ராஜா காடு போலீசில் புகார் செய்துள்ளார், அதன்பேரில் போலீஸ் மகேந்திரனை தேடி வந்தனர். விசாரணையில் மகேந்திரன் காணாமல் போன நாளன்று சாம்ஜி (44), ஜோமி (50) ஆகியோருடன் ஆட்டோவில் சென்றதாக தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் சாம்ஜி, ஜோமி மற்றும் முத்தையா (60), ஆகியோர் ராஜா காடு போலீசில் சரணடைந்தனர். போலீசில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது, கடந்த மாதம் 27-ம் தேதி சாம்ஜி, ஜோமி, முத்தையா மற்றும் மகேந்திரன் ஆகியோர் இரட்டைக் குழல் கொண்ட நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.
அப்போது கனமழை பெய்ததால் மகேந்திரன் நனையாமல் இருக்க மழைக்கோட்டை போட்டு சென்றுள்ளார். நான்கு பேரும் வெவ்வேறு திசையில் சென்றுள்ளனர். அப்போது மகேந்திரன் அணிந்திருந்த மழைக்கோட்டின் பட்டன்கள் வனவிலங்கு ஒன்றின் கண்கள் போல் இரவு நேரம் தெரிந்தது. அதை சாம்ஜி வனவிலங்கு என்று நினைத்து தன் கைவசம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்தில் மகேந்திரன் மரணம் அடைந்து விட்டார். துப்பாக்கியால் சுட்ட பின்பு அருகில் சென்று பார்த்த போது தான் இறந்து கிடப்பது மகேந்திரன் என்று, சாம்ஜி, முத்தையா, ஜோமி, ஆகியோருக்கு தெரிய வந்துள்ளது. சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க மூன்று பேரும் சேர்ந்து வனப்பகுதியில் மகேந்திரன் உடலை குழி தோண்டி புதைத்து விட்டு வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் 3 பேரும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்வோம் என்று ராஜா காடு போலீசில் சரணடைந்து உள்ளனர். இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.