May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

“வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது” – அண்ணா பல்கலைக்கழக விழாவில் மோடி பேச்சு

1 min read

“Strong government is not controlling but responsible” – Modi speech at Anna University function

29.7.2022
சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது” என்றும் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் மோடி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 வது பட்டமளிப்பு விழா இன்று கிண்டி வளாகத்தில் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய விழா 11.30 மணி வரை நடந்தது .
இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 69 மாணவ, மாணவியருக்கு பிரதமர் மோடி பதக்கங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கான எதிர்காலத்தை உங்களின் மனங்களில் ஏற்கெனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே, இன்றைய தினம் மட்டும் சாதனைகளுக்கான தினம் அல்ல, முன்னேற்றத்திற்கானதும் கூட.

இளைஞர்கள்

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு எதிர்நிலைகளை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது, அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும்.

புதிய தொழில்கள்

கடந்த ஆண்டு இந்தியா உலகின் 2-வது பெரிய செல்பேசி தயாரிப்பாளராக இருந்தது. புதிய கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையின் நெறியாக மாறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 15,000 வீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. புதிய தொழில்களும் பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சாதனை அளவாக நிதி ஆதாரத்தை பெற்றுள்ளன. மேலும் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது.

3 அம்சங்கள்

தொழில்நுட்பம் காரணமான இடையூறுகளின் சகாப்தத்தில் 3 முக்கியமான அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. முதல் அம்சம் என்பது தொழில்நுட்பத்திற்கான ஈர்ப்பாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டில் சாதகமான உணர்வு வளர்ந்து வருகிறது. பரம ஏழைகளும் கூட இதனை பயன்படுத்துகிறார்கள்.

2-வது அம்சம் என்பது கடுமையான பணி செய்பவர்களிடம் நம்பிக்கை கொள்வது. ஏற்கெனவே ஓர் ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக் கொள்வதில் சிரமம் இருந்தது. இவர்களை வாழ்க்கையில் நிலைத்தன்மை பெற்றவர்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம்.

3-வது அம்சம் என்பது சீர்திருத்தத்திற்கான மனோநிலை. வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கெனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம்.

வலுவான அரசு

வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது.
இளம் தலைமுறையிடம் எனது நம்பிக்கை உள்ளது. அவர்களிலிருந்துதான் ஊழியர்கள் வருவார்கள். அவர்கள் “அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் வெளிவர சிங்கங்கள் போல் பாடுபடுவார்கள்“ என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளால் ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவின் இளைஞர்களை எதிர்நோக்கியிருக்கிறது.

அப்துல்கலாம்

இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட பங்கேற்றிருக்கிறார். இந்த நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மாறிவரும் சூழ்நிலைகள் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதிசெய்கிறது.உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியாகும். உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவடைந்ததும் பிரதமர் மோடி விமானம் மூலம் அகமதாபாத் சென்றார்.

விழாவை தொடர்ந்து கிண்டி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. அண்ணா பல்கலையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.