சிவகங்கை அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி
1 min readFather, 2 sons killed by electric fence near Sivagangai
30.7.2022
முயல்வேட்டைக்கு சென்றபோது வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, தம்பியுடன் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
ராணுவ வீரர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள முகவூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் என்ற அய்யங்காளை (வயது 55). இவருடைய மகன்கள் அஜித் (25), சுகந்திரபாண்டி (22). இதில் அஜித் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது.
சுகந்திரபாண்டி படித்து முடித்து விட்டு, போலீஸ் வேலைக்கு தன்னை தயார் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, குழந்தையை காண விடுமுறையில் அஜித் சொந்த கிராமத்திற்கு வந்தார்.
முயல்வேட்டை
நேற்று முன்தினம் இரவு அய்யனார் மற்றும் அவரது மகன்கள் அஜித், சுகந்திரபாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு வயல்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தந்தை-மகன்கள் பலி அந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட நெல் பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்துள்ளதாக தெரிகிறது.
3 பேரும் பலி
இதை அறியாத இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கிக்கொண்டனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று, 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். உடல்கள் மீட்பு நேற்று காலையில் வயலுக்கு வந்த விவசாயிகள், அங்கு 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
. 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி கைது
இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி, வயலில் மின்வேலி அமைத்த மாரநாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துக்கருப்பனை கைது செய்தார். மின்சாரம் தாக்கி தந்தை, தம்பியுடன் ராணுவ வீரர் பலியான சம்பவம் முகவூர் மற்றும் மாரநாடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் கதறல் இதற்கிடையே 3 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்த மதுரை அரசு மருத்துவமனைக்கு. அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். மேலும் ராணுவ வீரர் அஜித்தின் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.