ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்டு- காங்கிரஸ் நடவடிக்கை
1 min readMLAs caught with Rs 50 lakh suspended from party – Congress move
31.7.2022
மேற்குவங்காளத்தில் காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து காங்கிரஸ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
காரில் பணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹிமந்த் சோரன் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அம்மாநில போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ராணிஹடி என்ற பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர்.
அந்த காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி ஆகிய 3 பேர் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து, காரின் பின் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது இருக்கைக்கு பின்னே கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கைது
அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் இந்த பணம் யாரிடம் பெறப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் இருந்து மொத்தம் 50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது.
சஸ்பெண்ட்
இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காரில் ரூ. 50 லட்சம் பணத்துடன் பிடிபட்ட இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.