May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை -பரபரப்பு தகவல்கள்

1 min read

Popular Friend of India Organization Ban – Promotional Information

28/9/2022
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது ஏன் என்பதற்கான காரணங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

2006-ம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடங்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல், சட்டவிரோத பண பரிவர்த்தனை, வெளிநாட்டு நிதி, கொலை, மத கலவரம், வெறுப்புணர்வு, வன்முறையை ஏற்படுத்தல் உள்பட பல்வேறு புகார்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார் எழுந்தது.

சோதனை

இதனை தொடர்ந்து கடந்த 22 மற்றும் 27-ம் தேதிகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்பு அமைப்புகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த 2 சோதனைகளின் போது சர்ச்சைக்குரிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பணம் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், நாட்டின் பல மாநிலங்களில் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தடை

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துணை அமைப்புகளான இந்திய மறுவாழ்வு அறக்கட்டளை, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்ஸ் கூட்டமைப்பு, மனித உரிமைகள் அமைப்புக்கான தேசிய கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், இந்தியா அறக்கட்டளை மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையை மேம்படுத்துங்கள் கேரளா ஆகிய அமைப்புகளுக்கும் 5 ஆண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின் வருமாறு:-

பயங்கரவாத இயக்கம்

2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் தங்களை சமூக-அரசியல் அமைப்பாக கூறிக்கொண்டாலும் உண்மையில் இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட சிமி (இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்) அமைப்பின் முன்னாள் தலைவர்களால் தொடங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட வங்காளதேச ஜமாத் – உல் – முஜாகிதின் அமைப்புடன் பிஎப்ஐ-க்கும் தொடர்பு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பிஎப்ஐ அமைப்பின் சில உறுப்பினர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பிஎப்ஐ அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
2010-ம் ஆண்டு கேரள பேராசிரியை டிஜே ஜோசப்பின் கையை வெட்டியது தொடங்கி பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சஞ்சித் (கேரளா, நவம்பர் 2021), வி. ராமலிங்கம், (தமிழ்நாடு, 2019), நந்து, (கேரளா, 2021), அபிமன்யு (கேரளா) சரத் (கர்நாடகா, 2017), ஆர். ருத்ரேஷ் (கர்நாடகா, 2016), பிரவீன் பூஜாரி (கர்நாடகா, 2016), சசி குமார் (தமிழ்நாடு, 2016) மற்றும் பிரவீன் நெட்டாரு (கர்நாடகா, 2022) உள்ளிட்ட பலரின் கொலைகளிலும், பல பயங்கரவாதச் செயல்களிலும், பிஎப்ஐ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள கொலைக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அல்லது பிற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிஎப்ஐ அமைப்பு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெறுவதாகவும், அந்த நிதியை வெவ்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தி பல்வேறு வழிகளில் அதை சட்டப்பூர்வமாக பெற்றது போன்று வெளிக்காட்டியுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு பெறப்பட்ட நிதி இந்தியாவில் பயங்கரவாத செயல், கிரிமினல் குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம், அது தொடர்பான வன்முறை சம்பவங்கள், டெல்லி வன்முறையில் பிஎப்ஐ-க்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப்

ஷாகின் பாக் போராட்டத்தின் பின்னணியில் பிஎப்ஐ-க்கு தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இஸ்லாமிய மத மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு பின்னாள் பிஎப்ஐ அமைப்பின் சதி வலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு எதிராக பயங்கரவாத செயல் நடவடிக்கையில் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் ஈடுபட்டதால் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.