May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டம்

1 min read

Mubin’s conspiracy plan to carry out simultaneous terror attacks at 5 places in Coimbatore

26.10.2022
கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டமி்ட்டது தெரியவந்துள்ளது.

கார் வெடிப்பு

கோவையில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி பலியானார்.

வெடி மருந்து

கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும். இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கோவை கோட்டைமேடு, எச்.எம்.பி.ஆர். தெருவில் உள்ள முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது நோட்டு புத்தகம் அமைப்பில் இருந்த ஒரு சிறு டைரியை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த டைரியை ஆய்வு செய்த போது சங்கேத குறியீடுகள், பல ரகசிய தகவல்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக “சுற்றுலா தலங்கள்” என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவையில் உள்ள 5 முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. கோவை ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி விக்டோரியா ஹால், ரேஸ்கோர்ஸ், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 5 இடங்கள் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. இந்த 5 இடங்களும் சுற்றுலா தலங்கள் அல்ல. பொதுமக்கள் தினமும் அதிக அளவு வந்து செல்லும் இடங்களாகும். எனவே இந்த 5 இடங்களிலும் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும் இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தினார்.
இந்த 5 இடங்களையும் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் தனியாக தொகுத்து தனி பிரிவுடன் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் பல பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கோவையில் ஆங்காங்கே வாங்கப்பட்ட வெடி பொருட்கள் அனைத்தும் முதலில் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டில்தான் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்குதான் அவர்கள் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான கலவையை செய்துள்ளனர்.
இதனால் ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இருந்து அதிக அளவு ரசாயன வாடை எழுந்துள்ளது. இதையடுத்துதான் அவர்கள் வெடி பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 23-ந் தேதி மதியம் போலீசார் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டுக்கு அதிரடி சோதனை நடத்த சென்ற போது அந்த வீடு முழுக்க தாங்க முடியாத அளவுக்கு ரசாயன வாடை வீசியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது முபின் தனது வீட்டிலேயே வெடி பொருட்கள் கலவையை செய்தது உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த சதி வேலைக்கு முபினுக்கு வெளிநாடுகளில் இருந்து பயிற்சி கொடுத்து உதவியவர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் கோவையில் முபினுக்கு உதவும் வகையில் வேறு யார் யார் உள்ளனர் என்ற பட்டியலை தயார் செய்து உள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவர்கள் முபின் போன்று சிலிண்டர் நிரப்பப்பட்ட கார்களை இயக்க தயாராக இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதில் முன்னேற்றம் இல்லாததால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. முபின் கோவையில் மட்டும் தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.