June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் உயர்த்தியதை எதிர்த்து வழக்கு

1 min read

Case against increase in fines for traffic violations

7.11.2022
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் உயர்த்தியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அபராதத் தொகை உயர்வு

போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் புதிய அபராதத்தை வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வழக்கு

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன்மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

முறையான சாலை

அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.