June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

வடகிழக்கு பருவமழை எதிரொலி: சென்னையில் பொதுமக்களுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி தீவிரம்

1 min read

North East Monsoon echoes: Intensification of work to provide chlorine tablets to public in Chennai

6.11.2022
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பொது மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குளோரின் மாத்திரைகள் வழங்கிடும் பணி நடந்து வருகிறது.

வடகிழக்கு தொடங்கினாலே சென்னை நகரம் கடல்போல் மாறிவிடும். ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த இந்த இடர்பாட்டை முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதும் போக்க நடவடிக்கை மேற்கொண்டார். மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணி பெருமளவில் முடிந்து விட்டது. அதனால் கடந்த சில தினங்களக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் தேங்கிய தண்ணீர் அடுத்த ஒருசில மணிநேரத்தில் வடிந்து விட்டது.
இந்த நிலையில் மழையால் நோய் பரவாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் சென்னையில் அதற்கான பணி தொடங்கியது. அதாவது குளோரின் மாத்திரைகள் வீடுவீடாக கொடுக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கிடும் பணிகள் மற்றும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவ மழையினால் மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக் கூடிய குளோரின் மாத்திரைகள் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

15 லிட்டர் தண்ணீர்

அதனடிப்படையில் பொது மக்களுக்கு மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் செயற்பொறியாளரின் தலைமையில் பொறியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்களைக் கொண்டு ஆய்வகத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் குழு மூலம் கண்காணிக்கப்படுகிறது.

குடிநீர் மாதிரிகள்

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் குடிநீரின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை 10 வெளி குத்தகைப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது பருவமழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 4.11.2022 வரை 13780 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பருவ மழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். உரிய இடைவேளையில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம். மேலும் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், ட்ரம்கள், மேல்நிலை/ கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். எனவே, பருவ மழையினால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென வாரியம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர் பாபு

இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் தமிழ்நாடு எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கினார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பருவக்கால மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா, உட்பட அதிகாரிகளும் உடனிருந்தனர். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

நேற்றைய மருத்துவ முகாமில் சென்னையில் 82,000 பேர் பயன்பெற்றுள்ளனர் . சென்னையில் கடந்த ஆண்டு மழையின் போது நீரில் தத்தளித்த இடங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை. தற்போது மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு பெருமழையில் மக்களை பாதிப்பில் இருந்து முதல்-அமைச்சர் காப்பாற்றியுள்ளார் . அதனால் அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சென்னையில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்மோட்டார்கள் வரவழைக்கப்படும். நவ.9ம் தேதிக்கு பிறகு பெருமழை பெய்தால் அதனை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் வீணாவதை தடுக்க சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நீரை சேமிப்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை (அதாவது இன்று) முழுவதும் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இறையன்பு

தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையம் எதிரே மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செங்கல்பட்டு தலைமைச்செயலாளர் ஆய்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே மழை நீர் தேங்கிய இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இனிவரும் காலங்களில் பஸ் நிலையம் எதிரே மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை அதைத்தொடர்ந்து, நன்மங்கலம் ஏரி பகுதி, ரேடியல் சாலை, புத்தேரி ஏரியிலிருந்து கீழ்கட்டளை ஏரி வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கால்வாய் பணி மற்றும் சேலையூர் ஐ.ஏ.எப். சாலை-அகரம் தென் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மூடுகால்வாய், பீர்க்கன்காரணை ஏரி உபரி நீர் செல்லும் மழைநீர் கால்வாய் பகுதிகளுக்கு சென்று வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், வெள்ள பாதிப்பு ஏற்படும் டி.டி.கே. நகர் பகுதி, பாப்பன் கால்வாய், அடையாறு ஆறு ஆகிய பகுதிகளில் அவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பல்லாவரம் எம்.எல்.ஏ., தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார், தாசில்தார் கவிதா மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.

ரூ.85 கோடியில் திட்டம் அப்போது தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பீர்க்கன்காரணை இரும்புலியூர் ஏரியிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் வெளியேறும் உபரி நீரால் கிழக்கு இரும்புலியூர் அருள் நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் மற்றும் மேற்கு பகுதியில் வாணியன்குளம் சக்தி நகர் டி.டி.கே.நகர் ரமணி நகர், மல்லிகா நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்குகிறது. இதை நிரந்தரமாக தடுக்க வாணியன்குளம் பகுதியில் இருந்து டி.டி.கே. நகர் பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலை வழியாக அடையார் ஆற்றுக்கு வெள்ள நீர் செல்லும் வகையில் ரூ.85 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள கான்கிரீட் மூடு கால்வாய் பணிகளை திட்ட அனுமதி பெற்று உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *