கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
Education should be brought to the state list- M.K. Stalin’s speech
11.11.2022
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பங்கேற்ற காந்தி கிராம பல்கலைககழக விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர்.
விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உயர்கல்வி
காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன. வட இந்தியர் அனைவரும் தமிழைக் கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண்.
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன.
டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.