ராணுவத்தில் பணி மோசடி செய்தவர் கைது
1 min read
Man arrested for defrauding army job
23.11.2022
ராணுவத்தில் பணி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அந்த மோசடி மூலம் வேலைக்கு சேர்க்கப்பட்டவர் 4 மாத வேலைக்கு பின் பணியிலேயே இல்லை என்றால் மோசடி சம்பவம் வெளியி்ல் தெரிந்தது.
ராணுவத்தில் வேலை
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 20). ராணுவத்தில் பதன்கோட் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இவர் முகாமில் தங்கி, 4 மாதங்களாக பணியாற்றி வந்து உள்ளார்.
இந்த நிலையில், அவர் போலீசில் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தன்னை வேலையிலேயே சேர்க்காமல், பணியில் சேர்ந்து விட்டது போல் மோசடி நடந்து உள்ளது என தெரிவித்து உள்ளார். மனோஜுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடை ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளது.
மோசடி
இதுபற்றி ராணுவ வட்டாரம் கூறும்போது, மனோஜ் 4 மாதங்களாக வேலை செய்து, மாதத்திற்கு ரூ.12,500 சம்பளமும் பெற்றுள்ளார். கடந்த ஜூலையில் பணி நியமனமும் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளது. உண்மையில், இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருந்த ராகுல் சிங் என்பவர் ரூ.16 லட்சம் வாங்கி கொண்டு மனோஜிடம், பணியில் சேர்த்து விட்டேன் என கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் தவுராலா பகுதியை சேர்ந்த சிங், பண மற்றும் பணி மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
அவரது கூட்டாளிகளும் இதற்கு உறுதுணையாக இருந்து உள்ளனர்.
கைது
இதுபற்றி ராணுவ உளவு பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில், ராகுல் மற்றும் அவரது இரு கூட்டாளிகளில் ஒருவரான பிட்டு சிங் ஆகியோரை மீரட் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய ராஜா சிங் என்ற மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
2019-ம் ஆண்டில் ராகுல் சிங் ராணுவத்தில் சேர்ந்து உள்ளார். பின், உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெற்றுள்ளார். எனினும், தன்னை உயரதிகாரி என காட்டி கொண்டு, ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமுடன் உள்ள இளைஞர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக கூட்டாளிகள் இருவரும் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டனர். அப்படி சிக்கியவர்களில் மனோஜும் ஒருவர். மனோஜை சரி கட்டுவதற்காக, சீருடையில் இருந்தபடி ராகுல் அவரை அழைத்து, கையில் ஒரு துப்பாக்கியையும் கொடுத்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார். மனோஜை முகாமுக்கு அழைத்து அவரது திறமைகளை பரிசோதித்து உள்ளார். அவரது உடல் தகுதியும் பரிசோதிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த பின்னர், மற்ற வீரர்கள் மனோஜிடம் பேசும்போது, இவரின் நியமன கடிதம், அடையாள அட்டை ஆகியவை போலி என கண்டறிந்து உள்ளனர்.
இதுபற்றி ராகுலிடம் மனோஜ் கேட்டுள்ளார். ஆனால், அதனை பொய்யான குற்றச்சாட்டு என ராகுல் கூறி விட்டார். மனோஜிடம் இருந்து தப்பிக்க, அக்டோபர் இறுதியில் கான்பூரில் உள்ள பயிற்சி அகாடமிக்கு அவரை ராகுல் அனுப்பியுள்ளார். அதன்பின்பு மனோஜ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ராணுவ முகாமில் இருந்தபோது, மனோஜின் உடன் இருந்த நண்பர்கள் சந்தேகத்தின் பேரில், ராணுவ உளவு பிரிவுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், தீவிர விசாரணை நடந்துள்ளது. இதனையடுத்து ராகுல், கூட்டாளி பிட்டு போலீசில் பிடிபட்டு உள்ளனர்.