April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

மெரினாவில் காதல் ஜோடிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பணம் பறிப்பு- போலி போலீஸ்காரர் கைது

1 min read

Extortion of romantic couple by filming them on mobile phone in Marina- Fake policeman arrested

30.11.2022
சென்னை மெரினாவில் காதல்ஜோடிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மிரட்டல்

சென்னை மணலி மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறார். இவர் ஓய்வு நேரத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார். அங்கு காற்றுவாங்க வரும் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடிப்பார். பின்னர் தன்னை போலீஸ்காரர், என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, செல்போன் புகைப்படத்தை காட்டி காதல் ஜோடிகளை மிரட்டுவார். உங்கள் பெற்றோருக்கு புகைப்படத்தை அனுப்பி விடுவேன், என்று பயமுறுத்துவார்.
போலீஸ் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சொல்வார். நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும், என்றால் பணம் வேண்டும், என்று சொல்வார். இதனால் பயந்து போய், சதீஷ்குமார் கேட்ட பணத்தை ஓசை இல்லாமல் கொடுத்து விட்டு, காதல் ஜோடிகள் தங்களது புகைப்படங்களை சதீஷ்குமாரிடம் இருந்து வாங்கி செல்வார்கள்.

ரூ.2 லட்சம்

சதீஷ்குமாரின் இது போன்ற நயவஞ்சக வலையில் சிக்கிய இளம்பெண் ஒருவரை, மிரட்டி சதீஷ்குமார், ரூ.2 லட்சம் வரை பறித்து விட்டார்.அந்த இளம்பெண் தான் வேலைபார்க்கும், அலுவலக நண்பர் ஒருவருடன் மெரினாவுக்கு வந்த போது, சதீஷ்குமாரின் செல்போன் படத்தில் மாட்டிக்கொண்டார். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. அதற்கு பிறகும் சதீஷ்குமார் விடவில்லை. தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தார்.இது குறித்து அந்த இளம்பெண் தனது கணவரிடம் சொல்லி கதறி அழுதார். பின்னர் தனது கணவர் உதவியுடன், மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மெரினா போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியபோது, சதீஷ்குமாரின் போலீஸ் வேடம் கலைந்தது. அவர் போலீஸ் வேலை பார்க்கவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இது போல போலீஸ் வேடம் போட்டு, பண மோசடியில் ஈடுபட்டது, தெரிய வந்தது. தற்போது தான் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.