June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கொலைப் பழியை போட தன்னைபோல் உடல் அமைப்பு கொண்ட பெண்ணை கொன்ற இன்னொரு பெண்

1 min read

Another woman who killed a woman of her own body to blame for the murder

3.12.2022
தன்னைபோல் உடல் அமைப்பு கொண்ட பெண்ணை கொன்ற இன்னொரு பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

மாயமான பெண்

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஹேமா சவுதிரி (வயது 28). இவர் நொய்டாவில் ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தவர்.
இதனிடையே, கடந்த நவம்பர் 12-ம் தேதி ஹேமா சவுதிரி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தால் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமா காணாமல் போன அன்று அவரை கடைசியாக பார்த்த அஜய் தாகூர் (வயது 27) என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்தியபோலீசார் அஜய் தாகூர் மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த தகவல்களை கேட்ட போலீசாரே பேரதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசார் அளித்த விவரம் பின்வருமாறு:-

காதலி

அஜய் தாகூரின் காதலி பயல் பாஹ்தி (22). பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். தனது உறவினரான சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். கடனை திருப்பி தரும்படி பயலின் பெற்றோரிடம் சுனில் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதேபோல், பயலின் அண்ணி மற்றும் அவரது 2 சகோதர்களும் பயலின் பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால், பயல் வீட்டில் எப்போதும் அமைதியற்ற சூழ்நிலையே நிலவி வந்தது. கடன் தொல்லை காரணமாக பயலின் பெற்றோர் மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர்.

பழிவாங்க…

தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள் சுனில், அண்ணி மற்றும் அவரது 2 சகோதர்களையும் பழிவாங்க வேண்டும் என்று பயல் திட்டமிட்டார். இதற்காக பிரம்மாண்டமான திட்டத்தை தீட்டியுள்ளார். தான் சிக்காமல் தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கொலை செய்ய பயல் முடிவு செய்தார்.
இது குறித்து தனது காதலன் அஜய் தாகூரிடமும் பயல் கூறியுள்ளார். தான் போலீசில் சிக்காமல் தனது உறவினர்களை பழிவாங்க பயல் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்.

தன்னைப்போல்…

அந்த சமயத்தில் பயல் பாஹ்தி தனது காதலன் அஜய் தாகூருடன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தன்னைபோன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த ஹேமா சவுதிரியை பயல் பார்த்துள்ளார். ஹேமாவின் உடல் அமைப்பு தன்னை போன்று உள்ளதை கவனித்த பயல் தனது காதலன் அஜயிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஹேமாவை கொலை செய்து உயிரிழந்தது தான் தான் என்று நம்ப வைக்க பயல் திட்டமிட்டுள்ளார். அதன் பின் தன் பெற்றோர் தற்கொலை செய்ய காரணமான உறவினர்கள் சுனில், அண்ணி மற்றும் அவரது 2 சகோதர்களையும் கொலை செய்ய பயல் முடிவு செய்தார்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த திட்டத்தை அமல்படுத்த பயலின் காதலன் அஜய் தாகூர் வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த பயல் போன்ற உடல் அமைப்பு கொண்ட ஹேமா சவுதிரியுடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர், கடந்த 12-ம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு அஜய் தனது காதலி பயலின் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார். அங்கு வீட்டில் காத்திருந்த பயல் தனது காதலன் அஜயுடன் சேர்ந்து ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்தார்.

ஹேமாவை கொலை செய்த பின் அவரது முகத்தில் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை முகத்தில் ஊற்றி முகத்தை சிதைத்துள்ளார். பின்னர், உயிரிழந்த ஹேமாவுக்கு தனது ஆடையை பயல் அணிவித்துள்ளார்.

தற்கொலை நாடகம்

சூடான கொதிக்கும் சமையல் எண்ணெய் முகத்தில் பட்டதால் முகத்தின் அழகு பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த உலகம் தன்னை ஏற்றுக்கொள்ளததாலும் தற்கொலை செய்துகொள்வதாக பயல் தன் கைப்பட கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டார்.
பின்னர் தான் எழுதிய தற்கொலை கடிதத்தை கொலை செய்த ஹேமாவின் அருகே வைத்துவிட்டு பயல் தனது காதலன் அஜய் உடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

திருமணம்

வீட்டை விட்டு வெளியேறிய பின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மத வழிபாட்டு தலத்தில் பயலும் – அஜயும் திருமணம் செய்துகொண்டனர். அதேவேளை, பயல் வீட்டில் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த ஹேமாவை கண்ட உறவினர்கள் அது பயல் தான் என்று நினைத்தனர்.
பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஹோமாவை பயல் என நினைத்து அவரது உடலை பயலின் உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர்.

வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த ஹேமா சவுதிரி வீடு திரும்பாததால் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமாவை அஜய் அழைத்து சென்றது தெரியவந்தது. அஜயை தேடிய போலீசார் காசியாபாத் அருகே ஒரு வாகன சோதனைச்சாவடியில் கடந்த வியாழக்கிழமை மாலை குற்றவாளிகள் பயல் மற்றும் அவரது காதலன் அஜயை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஜயிடமிருந்து கைதுப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். இருவரையும் கைது செய்து கோர்ட்டிற்கு அழைத்து சென்றபோது இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும், கொலைக்கு திட்டம் தீட்டியது தான் தான் என்று ஒப்புக்கொண்ட பயல் படிப்பை முடிந்தப்பின் தான் இந்திய ராணுவத்தில் சேர விரும்பியதாகவும் கூறியுள்ளார். பெற்றோர் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை தீர்த்துக்கட்ட தான் தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடகமாட எண்ணிய இளம்பெண்ணான பயல் தன்னைபோல உடல் அமைப்பை கொண்ட ஹேமாவை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து பின்னர் உறவினர்களையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.