June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலையில் தேரோட்டம்

1 min read

Chariot procession at Thiruvannamalai

3.12.2022
கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பின் உற்சாகத்துடன் பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
காலை விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா வந்தது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்பட்டன. இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடந்தது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் வந்தது. சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுத்தனர்.

மலையேறும் பக்தர்கள்

. திருவண்ணாமலை, கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். தீப தரிசன நாளான டிசம்பர் 6-ந் தேதி காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக 6-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் காலை 6 மணி முதல் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். மலை ஏற அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் பிற இதர அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம். மலை ஏறும் பக்தர்கள் பே கோபுரம் அருகில் உள்ள வழியாக மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலையேற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. 6-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. இந்த நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.