June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஜி-20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் 5ந்தேதி டெல்லி செல்கிறார்

1 min read

M.K.Stalin will go to Delhi on 5th to participate in the G-20 conference consultative meeting

3.12.2022
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந் தேதி காலை டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவே சென்னை திரும்ப உள்ளார்.

மு.க.ஸ்டாலின்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. டெல்லியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி முதல் நபராக அறிவித்தார்.
இதையடுத்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அவர் டெல்லி செல்வது உறுதி செய்யப்பட்டது. அதன்படி 5-ந் தேதி காலை டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவே அவர் சென்னை திரும்ப உள்ளார்.
டெல்லி செல்லும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்கிறார். ஆனால் தனித்தனியாக அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜி-20 மாநாடு அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியானாலும், மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளது.
எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற முழக்கத்தின்படி ஜி-20 மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கும் மத்திய அரசு தமிழகத்தில் மேலும் சில நகரங்களில் ஜி-20 கூட்டத்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் எந்தெந்த நகரங்களை தேர்வு செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.