தலைமை ஆசிரியரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்
1 min read
The female students attacked the head teacher with a rolling pin
16/12/2022
கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக மாணவிகள் தாக்கினர்.
பாலியல் தொல்லை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் உள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக இரவில் மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வரும் அவர் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் செல்போன்களில் ஆபாச வீடியோக்களை காட்டியும் தனது காம இச்சைக்கு இணங்க மாணவிகளை அவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் மாணவிகள் கடும் கோபத்தில் இருந்தனர்.
தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதிக்கு வந்த சின்மயமூர்த்தி, தனது அறைக்கு வரவழைத்த ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சல் போட்டபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். சம்பவம் பற்றி சக மாணவிகளிடம் கூறி கதறி அழுதார்.
இதைக்கேட்டதும் சக மாணவிகள் சிங்கப்பெண்களாக வெகுண்டெழுந்தனர். கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்மய மூர்த்தி தனது அறையை மூட முயன்றார். இருப்பினும் மாணவிகள் கதவை இடித்து தள்ளிச் சென்றனர். உள்ளே இருந்த அவரை தடியால் தாக்கினர். அவர் தான் தவறு செய்யவில்லை என கூறினார். அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதபடி தன்னிடம் அவர் தகாத செயலில் ஈடுபட்டார் என கூறினார். உடனே சுற்றி நின்ற மாணவிகள் தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே சம்பவம் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரியவந்தது. உடனே அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்திக்கு தர்மஅடி கொடுத்தனர்.
கைது
மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சின்மயமூர்த்தி, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையை தனது காமவலையில் வீழ்த்தியதும், அவருடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அந்த வீடியோக்களை காட்டி மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை எனில் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாகவும், டி.சி. (மாற்றுச்சான்றிதழ்) கொடுத்து அனுப்பிவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவிகள் பயந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.