குஜராத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் 9 பேர் சாவு
1 min read9 killed in bus-car collision in Gujarat
31.12.2022
குஜராத்தில்பஸ்-கார் மோதிய விபத்தில் 9 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
விபத்து
குஜராத்தின் நவ்சாரி பகுதியில் ஆமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து உள்ளது.
விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி நவ்சாரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு வி.என். பட்டேல் கூறும்போது, “விபத்தில் பஸ் மற்றும் கார் சிக்கி கொண்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். பலத்த காயமடைந்த நபர் சூரத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்” என கூறியுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரணம்
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
“நவ்சாரியில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உதவித் தொகையாக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில்” தெரிவிக்கப்பட்டுள்ளது.