80 பேரை பலிகொண்ட விஷ சாராய சம்பவத்தில் முக்கிய புள்ளி டெல்லியில் கைது
1 min readThe key point in the poisoned liquor incident that killed 80 people is the arrest in Delhi
31.12.2022
பீகாரில் 80 பேரை பலி கொண்ட விஷ சாராய சம்பவத்தில் பிடிபட்ட முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
80 பேர் பலி
பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது. பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. பீகாரில், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி, அதனை கடைப்பிடித்தும் வருகிறது.
முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது.
விசாரணை
இந்நிலையில், பீகாரில் சமீபத்தில் விஷ சாராயத்துக்கு அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டால் அதுபற்றிய தகவல்களை அளிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டது. இதனை தொடர்ந்து, 9 பேர் கொண்ட ஆணைய உறுப்பினர்கள் விசாரணையில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து, சாராய விற்பனையை தடுக்க போலீசாருக்கும் கடுமையான உத்தரவுகளை அரசு பிறப்பித்தது.
குற்றச்சாட்டு
எனினும், ஆளும் கட்சி உறுப்பினர்களே சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆலைகளுடன் தொடர்பில் உள்ளனர் என்று பா.ஜ.க. அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, விஷ சாராயத்துக்கு 80 பேர் பலியான சம்பவத்தில் முக்கிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
கைது
இதில், டெல்லியில் பதுங்கியிருந்த ராம் பாபு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் விஷ சாராய சம்பவத்துக்கு பின்புலத்தில் செயல்பட்ட முக்கிய புள்ளியாக அறியப்படும் ராம் பாபுவை கைது செய்த பின்னர், அவர் டெல்லி குற்ற பிரிவிற்கு உட்பட்ட போலீசாரின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி கூறிய பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சம்பவம் நடந்த உடனேயே இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். மதுபான தடைக்கு மக்கள் பலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிடிபட்ட குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.