June 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவை

1 min read

Thaipusa festival at Thoranamalai Murugan temple attracts lakhs of devotees

5.2.2023
தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் கொண்டாடப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது.

தோரணமலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கியமானது தைப்பூச திருவிழா. இன்று (5.1.2023) தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்லவமாக வந்தனர். பால்குட ஊர்வலம் மலைக்கு சென்றது. அங்கே முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதன்பின் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அதேபோல் மலையில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
அதே நேரம் அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கும் அபிஷேம், பூஜைகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், மகாஸ்ரீ கந்த ஹோமம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் உற்சவர்களான வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து திருக்கல்யாணம் உற்சவம் தொடங்கியது. பெண்கள் சீர் வரிசை தட்டு எடுத்துவர வேதமந்திரம் ஓத வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கும்மியடித்து பாடினர். மேலும் உழவாரக்குழுவினர் இசையுடன் பக்தி பாடல்களை பாடினார்கள்.

பின்னர் ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. வித்தியசமான இந்த நடனத்தை பக்தர்கள் கண்டு களித்தனர்.
விழாவையொட்டி பல பக்தர்கள் அலகுகுத்து காவடி எடுத்துவந்தனர். பறவை காவடி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாலையில் சரணஜோதி திருவிளக்கு பூஜை நடந்தது.
இரவில் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் காலை முதல் மாலை வரை விடாது அன்னதானம் நடைபெற்றது.
அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். காலையில் கிரிவலம் நடந்து. மொத்தத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக போலீஸ் பாதுகாப்பு வசதியுடன் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி நாட்டுப்பணித்திட்ட மாணவர்கள் போக்கவரத்தை சீர் செய்தனர். கடையம் சத்திரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருக்கல்யாணத்திற்கான உதவிகளை செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.