May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததன் பின்னணி என்ன?

1 min read

What is the background of Prabhakaran’s announcement that Prabhakaran is alive?

14.2.2023
பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது. பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரபாகரன்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் இதற்கு முன்பு பல தடவை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அதை யாரும் கண்டு கொண்டதில்லை. நேற்று அவர் தஞ்சையில் பிரபாகரன் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையும், அவரது பேட்டியும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ. நெடுமாறன் அறிவித்த போதிலும் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக உலக தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மரணம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்தபடியே உள்ளது.
பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு கருத்து தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்கள், ‘பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி’ என்று மட்டுமே பதில் அளித்து இருக்கிறார்கள். அவர்களது இந்த பதில் மூலம் 99 சதவீத தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

வைகோ, சிமான்

பழ.நெடுமாறன் அளவுக்கு இல்லாவிட்டாலும் விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் இடையே வைகோவுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆனால் அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை இதுவரை ஏற்கவில்லை. பிரபாகரனுக்கு நிழலாக இருந்தவர்கள் மூலம் தனக்கு கிடைத்த தகவல்களின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே வைகோ பல தடவை உணர்த்தி உள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் இதே நிலைப்பாட்டில்தான் காணப்படுகிறார்.

இந்த நிலையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் மீண்டும் சொல்லி இருப்பதற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணம் இருக்கும் என்று உளவு அமைப்புகள் கருதுகின்றன.

இலங்கை தமிழர்கள்

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்று கொடுக்கும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சிங்களத் தலைவர்களும் 13-வது சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் சீனா பல்வேறு வகைகளிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கினால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகின்றது.

இதன் காரணமாக பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஈழத் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பலனை பெற தொடங்கி இருக்கிறார்கள். இது உலக தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளது.

இது பிடிக்காமல் தான் பழ.நெடுமாறன் திடீரென இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை பரபரப்பாக மாற்ற விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி நாடுகளில் வாழும் அவர்கள் இதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை அணுகியது உண்டு. ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே தன்னால் பொது வெளியில் அப்படி அறிவிக்க முடியும் என்று சீமான் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார்.
இதையடுத்து பழ.நெடுமாறன் மூலம் இந்த அறிவிப்பை விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் அறிவிக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்தேகம்

இதற்கிடையே பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் 18-ந் தேதி கொல்லப்பட்டாரா? அல்லது 19-ந் தேதி கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அதுபோல அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதா? அல்லது நீர் நிலையில் இருந்து மீட்கப்பட்டதா? என்பதிலும் உரிய பதில் இல்லை. என்றாலும் சர்வதேச அளவில் ராணுவ நிபுணர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். டி.என்.ஏ. பரிசோதனை உள்பட பல்வேறு தகவல்களை அவர்கள் இதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள். இலங்கை ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இந்திய உளவு அமைப்புகளும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்றே சொல்லி வருகின்றன.
பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கத்தில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கெடுபிடி

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ரனில் விக்கிரம சிங்கே குறைத்துள்ளார். இந்த நிலையில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மீண்டும் கெடுபிடி ஏற்படலாம் என்ற தவிப்பு உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. சர்ச்சைக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் சங்கடங்களை அனுபவிக்க இந்த அறிவிப்பு காரணமாகி விடலாம் என்று அரசியல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.