May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது

1 min read

Assistant of former minister Vijayabaskar arrested

4.3.2023
அரசு வேலைக்காக லஞ்சம் என்ற பெயரில் மோசடியாக பணம் வாங்கிய விவகாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

உதவியாளர்

அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்தவர் ரவி. இவர் அரசு வேலை வாங்கி தருவதாக ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணான முத்துலட்சுமி தலைமை செயலகத்தில் புகார் அளித்தார்.
அதில் விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி அரசு வேலையை அவர் வாங்கி தரவில்லை. இதனால் நான், கொடுத்த பணத்தை கேட்டேன். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை ஏமாற்றி மிரட்டல் விடுக்கும் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவின் வேலை மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, முத்துலட்சுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

கைது

இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். டிரைவர் விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான ரவி தற்போது தலைமை செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில்தான் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசு வேலைக்காக லஞ்சம் என்ற பெயரில் மோசடியாக பணம் வாங்கிய விவகாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தரகராக செயல்பட்ட நபர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசில் சிக்கி இருக்கும் அவர் மீதும் விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.