லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கில் ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி: அமலாக்க துறை தகவல்
1 min read
Money laundering to the tune of Rs 600 crore in the case against Lalu Prasad: Information from the Enforcement Directorate
11.3.2023
லாலு பிரசாத்துக்கு எதிரான ரெயில்வேயில் வேலை வாங்கி தர நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி நடந்து உள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலானகாலகட்டத்தில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி உள்ளது. இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதுவரை நடந்த சோதனை முடிவில், லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என அமலாக்க துறை இன்று தெரிவித்து உள்ளது. லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் விவகாரத்தில் மற்றும் பிற துறைகளில் மேற்கொள்ளப்பட்ட கூடுதலான முதலீடுகளை பற்றி கண்டறியும் சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது என்று அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.