ரிதன்யா தற்கொலை: கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
1 min read
Rithanya suicide: Bail petitions of husband, father-in-law and mother-in-law dismissed
7.7.2025
ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார், மாமியாரின் ஜாமின் மனுக்களை திருப்பூர் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கவின்குமார், ஈஸ்வர மூர்த்தி – சித்ரா தேவி தம்பதிக்கு ஜாமின் வழங்க ரிதன்யா குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கின் விவரம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28 ந்தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் கவின்குமார் (வயது 28) மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.