‘சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் பிறரை தேசவிரோதிகள் என்பதா?’-மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்
1 min read
‘Are those who did not participate in the freedom struggle considered others anti-national?’- Mallikarjun Kharge condemns
17.3.2023
‘சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் பிறரை தேசவிரோதிகள் என்பதா?’ என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும், தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் முழு அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும்கு ற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஜனநாயகத்தை விமர்சித்ததன் மூலமும், இந்திய ஜனநாயகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று அந்நிய மண்ணில் தெரிவித்ததன் மூலமும் நம் நாட்டின் இறையாண்மை மீது ராகுல் காந்தி பெரிய தாக்குதல் நடத்தியுள்ளார். இந்திய மக்களால் திரும்ப திரும்ப நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறி விட்டார்” என்று விமர்சித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இதைச் செய்கிறார்கள். ராகுல் காந்தி தேச விரோதியாக இருக்க முடியுமா? ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் தேச விரோதிகளா? ஜே.பி.நட்டாவின் கருத்து கண்டனத்திற்குரியது. இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் பதிலடி கொடுப்போம். ராகுல் காந்தியே இதற்கு பதில் சொல்வார். அதனால்தான் அவர்கள் (பா.ஜ.க.) பயப்படுகிறார்கள். அவருக்கு ஏன் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை? பிரதமர் மோடி கூட, ஆறு முதல் ஏழு நாடுகளுக்குச் சென்ற பிறகு, ‘இந்தியாவில் பிறந்த நான் என்ன பாவம் செய்தேன் என்று மக்களும் தொழிலதிபர்களும் கூறுகிறார்கள்’ என்று கூறினார். இப்படி நாட்டு மக்களை அவமானப்படுத்தியவர் எங்களை தேசவிரோதி என்கிறாரா? முதலில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.