கேரளாவில் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் இப்தார் விருந்து
1 min read
Iftar party at Lakshmi Narasimha temple complex in Kerala
12.4.2023
கேரளாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் இப்தார் விருந்து நடந்தது.
லட்சுமி நரசிம்மர் கோவில்
நாடு முழுவதும் மதப்பிரச்சினைகள் தலைதூக்கி வரும் நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் ரம்ஜான் விழாவையொட்டி இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வெட்டிச்சிறா பகுதியில் 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில் அருகே சுமார் 30 முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்கள் உதவியுடன் ரூ.15 லட்சம் செலவில் இக்கோவில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்பு இக்கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அப்பகுதி முஸ்லிம்களும் சமயசார்பற்ற முறையில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இப்தார் விருந்து
இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ரம்ஜான் விழாவுக்காக இக்கோவில் நிர்வாகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த விருந்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
விருந்தில் காய்கறிகள், கஞ்சி மற்றும் பழ வகைகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கோவில் கமிட்டியில் சில முஸ்லிம் நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இக்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.