சூடான் கலவரத்தில் 270 சாவு- இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
1 min read270 killed in Sudan riots- action to ensure safety of Indians
19.4.2023
சூடான் கலவரத்தில் 270 இறந்துள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சூடான் கலவரம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடும் மோதல் நடந்துள்ளது. சூடான் கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு
சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அபுதாபி போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே ட்விட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது. இந்நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறும்போது, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அவர்கள் ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். அதேபோல் பிரிட்டன் துணை தூதர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரும் அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்துடன் சூடான் சர்ச்சை குறித்து தொடர்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், சூடான் நிலைமை குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் எச்.எச்.பைசல்பின் ஃபர்ஹானிடம் பேசியதாக கூறியுள்ளார்.
மேலும், கார்த்தூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்திய சமூகத்தின் நிலை குறித்த வழக்கமான அறிக்கைகளைப் பெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டரில் வார்த்தைப் போர்: முன்னதாக, சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்காக மத்திய அரசு 1800119797 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்தது. சூடானில் வெவ்வேறு இடங்களிலும் 1500 பேர் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த 31 பேர் சூடானில் சிக்கியுள்ளது குறித்து சித்தராமையா கவலை தெரிவித்திருந்தார். கர்நாடகாவின் ஹக்கி பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 31 சூடானில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு பதிலுரைத்திருந்த ஜெய்சங்கர், ”சூடானில் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. இப்போது அரசியல் செய்யாதீர்கள்” என்று பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”ஒரு முன்னாள் முதல்வரின் பொறுப்பான கவலைக்கு வெளியுறவு அமைச்சர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிக்கிறது. இந்த நபர் அதிகாரியாக இருந்தபோது எனக்குத் தெரியும். இப்போது அவர் யாருக்கோ முழு விசுவாசியாகிவிட்டார். தன் விசுவாசத்தை நிரூபிக்க ஏதேதோ செய்கிறார்” என்று ட்வீட் செய்திருந்தார்.